search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு வாகனம்"

    அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்று பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இயங்கும் லாரிகள் ஒவ்வொன்றின் வேகத்தை கண்டறிய கருவி பொருத்தபட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான் பணி கொடுக்க வேண்டும்.

    விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலை விபத்தில் அடிபட்ட நபர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விபத்துகளை தடுக்க சிமெண்டு ஆலை, நெடுஞ்சாலை துறையினர், போலீசார் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    கூடலூர் அருகே சரக்கு வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் கேரள வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் குமுளி ரோஜாப்பூ கண்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் சரத்குமார் (வயது22). இவர் கேரள வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த நண்பர் தாஜூதீன் என்பவருடன் கம்பத்திற்கு பைக்கில் வந்தனர். வேலை முடிந்து 2 பேரும் மீண்டும் குமுளிக்கு திரும்பிக் கொண்டிந்தனர்.

    குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பகவதியம்மன் கோவில் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தாஜூதீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லோயர்கேம்ப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. சாலை விதிகளை மீறி அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. மேலும் சில இடங்களில் குறுகலான வளைவு உள்ளது.

    இது தெரியாமல் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews

    முதுகுளத்தூர் பஜார் பகுதியில் சரக்கு, வாடகை வாகனங்களை நிறுத்துவதால், வாகனங்கள் இயக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரில் உள்ள கடைகளுக்கு வெளியூர்களில் இருந்து பொருட்களை இறக்க வரும் சரக்கு வாகனங்கள், பஜார், தேரிருவேலி விலக்கு சாலை யோரங்களில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், குறுகலாக உள்ள பஜார் ரோட்டில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் நடு ரோட்டில் நிறுத்தபடும் அபாயம் உள்ளது.

    ஆகவே ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வெளியூர் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து 300 லிட்டர் சாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடலூர்-சிதம்பரம் சாலையில் வாகன சோதனை நடத்துமாறு, கடலூர் முதுநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் சிவானந்தபுரத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்தது.

    போலீசார் வாகன சோதனை செய்ததை கண்டதும், அதனை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாக நடுரோட்டிலேயே சரக்கு வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவரும், அவருடன் வந்த வாலிபரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், 2 பேரையும் துரத்திச்சென்றனர். சிறிது தூரம் வரை ஓடிச்சென்ற அவர்களை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

    இதற்கிடையில் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அதில் பொருட்கள் எதுவும் இல்லை. அப்படியானால் போலீசாரை கண்டதும் எதற்காக 2 பேரும் தப்பி ஓடினார்கள் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து இருந்ததை போலீசார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் 6 மூட்டைகளில் பாக்கெட் சாராயம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது 300 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் பூரணங்குப்பத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் டிரைவர் சக்தி(வயது 28), சேகர் மகன் ரவிக்குமார்(24) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    சாராயம் கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் பிரத்யேகமாக ரகசிய அறை அமைத்ததும், இந்த ரகசிய அறை திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும், இந்த அறையை பயன்படுத்தி புதுச்சேரியில் இருந்து பல முறை சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த சாராயத்தை யாரிடம் கொடுப்பீர்கள் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி கொண்டு கடலூருக்கு வருவோம். எங்களது வாகனம் குறிப்பிட்ட சாராய வியாபாரிகளுக்கு தெரியும். எங்களது வாகனத்தை கண்டதும், அவர்கள் எங்களை செல்போனில் தொடர்பு கொள்வார்கள். உடனே நாங்கள் அவர்கள் கூறும், முட்புதரில் சாராய மூட்டைகளை வைத்துச்செல்வோம். அதன்பிறகு அதை யார் எடுத்துச்செல்வார்கள் என்பது தெரியாது என்று கூறினர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம், மற்றும் அதை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×